கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பதில் உலக நாடுகள் (சிறப்புக்கட்டுரை தமிழ்மொழி பெயர்ப்பு )
தொற்றுநோய் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி, தடுப்பூசிக்கான போட்டி சூடுபிடிக்கும்போது கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு சாத்தியமான தடுப்பூசியை உருவாக்குவதில் யார் முதலில் இருப்பார்கள், அந்த தடுப்பூசி மக்களிடையே எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதைக் கட்டுப்படுத்த பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் நிறுவனங்கள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் பாதிப்புமிக்க தீவிரமான கவலைகளை எழுப்புகிறது.
மருத்துவ மதிப்பீட்டில் தற்போது 24 பேரில் தடுப்பூசி முன்பரிசோதனைகள் உள்ளன. அதாவது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகெங்கிலும் பல நாடுகளில் 140 க்கும் மேற்பட்டோர் முன்கூட்டிய பரிசோதனைகளில் உள்ளனர். மருத்துவ முன்பரிசோதனைகளில் இருக்கும், நான்கு மட்டுமே மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை எட்டியுள்ளனர். அவையாவன அஸ்ட்ராசெனெகா (AstraZeneca இங்கிலாந்தை தளமாகக் கொண்டது), மாடர்னா (Moderna அமெரிக்காவை தளமாகக் கொண்டது), மற்றும் சினோவாக் (Sinovac) மற்றும் சினோபார்ம் (Sinopharm) தயாரிக்கும் சீனாவை சேர்ந்த இரண்டும் உள்ளடங்குகின்றன. ஃபைசர் (Pfizer அமெரிக்காவை தளமாகக் கொண்டது) ஜூலை இறுதியில் கட்டம் 2B மற்றும் கட்டம் 3 சோதனைகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
STAT செய்தியின்படி, அமெரிக்க உயர் சுகாதார அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட தேசிய மருத்துவ அகாடமி, தடுப்பூசியின் ஆரம்ப விநியோகத்திற்கான ஒரு கட்டமைப்பை நிறுவ ஒரு குழுவை பெயரிட்டுள்ளது. இருப்பினும் இது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் தடுப்பூசி கொள்கை குறித்த பரிந்துரைகளை வழங்கும் அதன் ஆலோசனைக் குழுவின் பங்கை மீறுகிறது. அரசாங்கத்தின் விரைவாக குறுக்கிடும் நடவடிக்கை குழுவின் செயல்பாட்டால் இதனை மேலும் சிக்கலானதாக்குகிறது. இத்திட்டம் தனியார் உயிரியல்தொழில்நுட்ப மற்றும் மருந்து நிறுவனங்களை இலாபமடைய செய்ய கூட்டாட்சி நிதியைப் பயன்படுத்துகின்றது.
மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான மையத்தின் இயக்குனர் மைக்கல் ஓஸ்டர்ஹோல்ம், “விரைவாக குறுக்கிடும் நடவடிக்கை குழுவுக்குள் செயல்படும் ACIP [நோய்த்தடுப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் குழு] என்ற இந்த புதிய குழு, மற்றும் இதனால் வெளிவருவது பொது சமூகத்திற்கு எந்த அடிப்படையில் இருக்கும் என்பதும், யார் இறுதி முடிவை எடுப்பார்கள் மற்றும் நிகழ்முறை எவ்வாறு செயற்படுத்தப்படும் என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை” என்றார்.
மூன்றாம் கட்டத்தில் உள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒவ்வொரு COVID-19 தடுப்பூசியும் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு மருந்தளவை (two-dose) வழங்கும் முறையைப் பயன்படுத்துகிறது. உயிர்காக்கும் இந்த சிகிச்சையை முதலில் அணுக வேண்டியவர்களை அடையாளம் காண என்ன அளவுகோல் பயன்படுத்தப்படும் என்ற முக்கியமான கேள்வியை முன்வைப்பதுடன், ஆரம்பத்தில் விநியோகம் மிகவும் குறைவாக இருக்கும் என்ற சிக்கலையும் அதனுடன் சேர்க்கின்றது. (நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இரண்டு மருந்தளவு வழங்கும் முறையானது ஒரு மருந்தளவு முறையால் கிடைக்காத ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.)
ஜூலை 21 அன்று எரிசக்தி மற்றும் வர்த்தகம் தொடர்பான காங்கிரஸ் குழுவில் “தடுப்பூசிக்கான பாதை” குறித்த விசாரணையின் போது, முக்கிய மருந்து நிறுவன நிர்வாகிகள் பார்வையாளர்களாக இருந்தபோது, கலந்துரையாடலின் ஆரம்பத்தில் மருந்தின் அளவு மற்றும் விநியோகம் குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டது. ஒரேகனின் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ்காரர் கிரெக் வால்டன் கூறினார், “இது எங்களுக்கும் பொதுமக்களுக்கும் [இரண்டு-மருந்தளவு விதிமுறைகளைப் பற்றி] புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும். 300 மில்லியன் மருந்தளவு அல்லது 30 மில்லியன் மருந்தளவு வைத்திருப்பதைப் பற்றி நாம் பேசும்போது, ஒரு மோசமான சூழ்நிலையில் உண்மையில் தடுப்பூசி போடப் போகிறவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அதை பாதியாகக் குறைக்க வேண்டியிருக்கும்”.
இந்த விசாரணையின் போது கலந்துகொண்டவர்களில் AstraZeneca இன் பிரதி நிர்வாகதலைவர், Johnson & Johnson இன் மருத்துவமுறை அபிவிருத்திக்கும் மருத்துவத் துறைக்குமான தலைவர் Dr. Macaya Douoguih, Merck இன் உதவி நிர்வாக தலைவரும் நோயாளிகளுக்கான தலைமை அதிகாரியுமான Dr. Julie Gerberding, Moderna இன் தலைவரான Dr. Stephen Hoge, Pfizer இன் தலைமை வியாபார அதிகாரியான Mr. John Young ஆகியோர் இருந்தனர். உண்மையில் அவர்களின் விசுவாசம் அவர்களின் பங்குதாரர்களுக்கு சார்பாக கண்டிப்பாக இருக்கும்போது, இந்த நபர்களுக்கிடையில் மருத்துவர் என்ற அவர்களின் பட்டம், ஒரு சுயநலமில்லாதவர்களாக காட்டிக்கொள்வதற்கான ஒரு அடையாள அர்த்தத்தையே எடுத்துள்ளது.
தடுப்பூசிகள் விரைவாக உருவாக்கப்படுவது குறித்த கவலை, பொது மக்களில் தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றிய தேவையான மதிப்பீட்டைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என்பது உள்ளிட்ட பிற முக்கிய பிரச்சினைகள் குழுவால் எழுப்பப்பட்டன. பில்லியன் கணக்கானவர்களிடையே தடுப்பூசி பாரியளவில் விநியோகிக்கப்படுகையில் சிறிய குழுக்களிடையே இருக்கும் சிறிய அரிதான கடுமையான பக்க விளைவுகள் கூட இரண்டாம் மற்றும் மூன்று கட்ட பரிசோதனைகளில் நிலைமையை மோசமடைய செய்யலாம் என்ற கவலைகளும் எழுப்பப்பட்டன.
குழுவின் தலைவரும், நியூ ஜேர்சியின் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ்காரர் பிராங்க் பலோன் மேலும் கூறுகையில், “நாங்கள் அனைவரும் விரைவில் ஒரு கோவிட்-19 தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒரு தடுப்பூசி விநியோகிக்கப்படுவதற்கு முன்பு, பொது சுகாதார நிபுணர்கள் அது பாதுகாப்பாக இருப்பதையும், பயனுள்ள மற்றும் தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்கவும் உறுதி செய்ய வேண்டும். செயல்திறன் இல்லாத ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க ட்ரம்ப் நிர்வாகத்தால் FDA கட்டாயப்படுத்தப்படலாம் என்பதே எனது அச்சமாக உள்ளது” என்றார்.
Moderna வின் தலைவர் ஹோஜ் குழுவிற்கு பின்வருமாறு உறுதியளித்தார், “12 முதல் 18 மாதங்களில் பயனுள்ள தடுப்பூசியை வெளியிடுவது பாதுகாப்பான வழியில் சாத்தியமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பொறுப்பான முறையில் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் 24 மணி நேரமும் வேலை செய்கின்றோம்”. ஏப்ரல் மாதத்தில் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை மூலம் Moderna, 483 மில்லியன் டாலர் நிதியுதவியைப் பெற்றது. அந்த கூட்டுழைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, Moderna வின் பங்கு விலை ஒரு பங்குக்கு 40 டாலருக்கு கீழ் இருந்து 80 டாலருக்கு மேல் உயர்ந்து, அதன் மதிப்பை இரட்டிப்பாக்குகிறது. இந்த வாரம் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்குவதை நோக்கி Moderna நகர்கிறது.
Pfizer தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Dr. Albert Bourla, “இந்த உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை விரைவான நேரத்தில் உற்பத்தி செய்ய அயராது உழைப்பதன் மூலம் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
ஒரு சிறிய ஜேர்மன் உயிரியல்தொழில்நுட்ப நிறுவனமான BioNTech உடன் இணைந்து செயல்படும் Pfizer இற்கு, அவர்களின் mRNA கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 600 மில்லியன் மருந்தளவிற்கு 2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, மருத்துவ பரிசோதனைகளின் முடிவு நிலுவையில் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் 100 மில்லியன் மருந்தளவிற்கான ஆரம்ப கேள்விப்பத்திரத்தை வழங்கியுள்ளதுடன், கூடுதலாக 500 மில்லியன் மருந்தளவினைப் பெறுவதற்கான விருப்பத்தை முன்தவைத்துள்ளது. Pfizer மற்றும் BioNTech இந்த மாத இறுதியில் 2b மற்றும் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க நகர்கின்றன. மேலும் 2020 அக்டோபர் மாத தொடக்கத்தில் அதிகாரிகளின் அனுமதியை பெறுவதற்கு முயலும்.
ட்ரம்பின் விரைவாக குறுக்கிடும் நடவடிக்கை குழுவின் ஆதரவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு உயிரியல்தொழில்நுட்பம் மற்றும் தடுப்பூசி அபிவிருத்தி நிறுவனமான Novavax, ஜூலை மாத தொடக்கத்தில், அவர்களின் தடுப்பூசியின் வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய அரசுடன் கூட்டு சேருவதாக அறிவித்தது.
இந்த ஒப்பந்தம் மேரிலாந்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு 1.6 பில்லியன் டாலர்களை வழங்கும். சாத்தியமான தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தாலும் கூட, பல மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அதன் நிர்வாகிகளுக்கு நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் 33 ஆண்டு வரலாற்றில், இந்த நிறுவனம் ஒருபோதும் ஒரு தடுப்பூசியை சந்தைக்கு வழங்கவில்லை. இருப்பினும் அதன் சந்தை மதிப்பு தொற்றுநோய்களின் போது 250 மில்லியன் டாலரிலிருந்து 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மன்றத்தின் முன் உரையாற்றிய நிர்வாகிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் தயாரிப்புகள் தயாராக இருக்கும் என்று சட்டமியற்றுபவர்களுக்கு உறுதியளித்தனர். இருப்பினும், அப்பட்டமான சொற்களில், Moderna வின் தலைவரான Hoge, "நாங்கள் அதை உற்பத்தி செய்த விலைக்கு விற்க மாட்டோம்" என்று கூறினார். மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள் மற்றும் கவலைகள் வெறுமனே சம்பிரதாயரீதியானதே. Remdesivir மீதான விசாரணைகளின் போது கண்டுகொண்டபடி, இலாபத்திற்கான விலை நிர்ணயம் செய்வதற்கு அரசாங்கத்தைத் தடுக்க உண்மையான வழிமுறை இல்லை. உண்மையில், இந்த சிகிச்சை முறைகளை அணுகுவதற்கான நிதியை வழங்குவதில் அரசாங்கம் முன்னணியில் உள்ளது. "நாங்கள் எதிர்கொள்ளும் அவசர உலகளாவிய சுகாதார அவசரத்திற்கு இணங்க எங்கள் சாத்தியமான தடுப்பூசியை நாங்கள் விலை நிர்ணயம் செய்வோம்" என்று Pfizer இன் தலைமை வணிக அதிகாரி Young கூறினார்.
எவ்வாறாயினும், அமெரிக்க அரசாங்கத்துடனான Novavax இன் உறவை சிக்கலாக்குவது என்னவெனில், இந்நிறுவனம் ஏற்கனவே 388 மில்லியன் டாலர் மதிப்புள்ள மானியங்களை தொற்றுநோய்களுக்கான ஆயத்த கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியிலிருந்து (CEPI) பெற்றுள்ளது, இது CEPIஇற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதற்கான முதல் மறுப்பு உரிமையைக் கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டுப்பட்டிருக்கும் என்பது இனிமேல்தான் தீர்மானிக்கப்படவுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, CEPI மற்றும் தடுப்பூசி கூட்டணியான Gavi உடன் இணைந்து, உலகின் அதிக ஆபத்துள்ள மக்களுக்காக 2 பில்லியன் மருந்தளவு கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்க உள்ளது. இத்தகைய பாரிய முயற்சியின் செலவு 18.1 பில்லியன் டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு இறுதிக்குள் 11.3 பில்லியன் டாலர்கள் திரட்டப்பட வேண்டும். இதற்கும் மேலாக, வளர்ந்த நாடுகளிடமிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஒரு சாத்தியமான மருந்துகளை வாங்குவதற்கான உறுதிப்பாட்டைக் கோருகிறது. அவர்களின் கடமைப்பாட்டிற்காக, இந்த நாடுகளுக்கு CEPI ஆல் ஆதரிக்கப்படுகின்ற ஒன்பது பரிசோதிக்கப்படவுள்ள தடுப்பூசிகளின் பங்குகள் வழங்கப்படும். மருத்துவ பரிசோதனைகளில் மற்றவை பயனற்றவை என நிரூபிக்கப்பட்டால், இந்த ஏற்பாடுகள் அந்த அரசாங்கங்களுக்கு சாத்தியமான தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்கின்றன.
இந்த முயற்சிகள் தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து எடுக்கப்பட்ட மோசமான மற்றும் பேராசைமிக்க முடிவுகளில் தங்கியுள்ளன. SARS இன் காரணியாக கொரோனா வைரஸை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகித்த ஜேர்மன் நுண்ணுயிரியல் வல்லுனரான Klus Stohr, புளூம்பேர்க்கிற்கு அளித்த பேட்டியில், 90 சதவீத மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்ளாக இருப்பர் என்று எச்சரித்தார். ஏனைய சுவாச நோய்க்கிருமிகளைப் போலவே, குளிர்காலமும் மற்றொரு அலைகளை உருவாக்கும். இது தற்போதைய நிலைமையை விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றார்.
அவர் கூறினார், “ஜேர்மனி போன்ற நாடுகளில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கணிசமான அளவு தடுப்பூசி இருக்கலாம் மற்றும் முதியோருக்கு அதை வழங்குவதற்கு நான்கு, ஐந்து, ஆறு மாதங்கள் ஆகலாம். பிரேசில், ஆர்ஜென்டினா அல்லது சிலி போன்ற ஒரு நாட்டிற்கு இந்த மூலோபாயம் வேறுபட்டிருக்கலாம். இவை ஒருபோதும் ஒரு தடுப்பூசியைப் பெறாது. இது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது தடுப்பூசி அல்ல என்பதுடன் இணங்கிப்போகவேண்டி இருக்கும். வைரஸ் தான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உலர்ந்த மரத்தையும் எரிப்பதன் மூலம் இந்த தொற்றுநோயை முடிவுக்கு வரும். கடைசியாக பீடிக்கப்படக்கூடிய நபர் பாதிக்கப்படும்வரை இந்த தீ வெளியேறாது”.
இந்த சூழலில்தான், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அமெரிக்காவின் சமீபத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், “பாரிய பொருளாதார மற்றும் அரசியல் சக்தியை வழங்கக்கூடிய ஒரு விஞ்ஞான முன்னேற்றத்திற்கான பொருட்களைப் பாதுகாப்பதற்கான” புவிசார் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என Wall Street Journal குறிப்பிடுகின்றது. தடுப்பூசி தரவைத் திருட முயன்றதற்காக சீன குடிமக்களுக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு ஒரு குற்றத்திற்கான சாட்சிகளிலிருந்து அல்ல, ஆனால் கொரோனா வைரஸுக்கு ஒரு தடுப்பூசிக்கு காப்புரிமை பெற்ற முதல் நபராக அமெரிக்கா தன்னை மூலோபாயரீதியாக நிலைநிறுத்த முடியும் என்பதை உறுதிசெய்கிறது. இருப்பினும், இத்தகைய வரம்புமீறல்கள் பிராந்திய ஆக்கிரமிப்புகள் உதித்தெழுவதற்கு போதுமான குறிப்பிடத்தக்க வெகுஜனங்களை வழங்கக்கூடும்.
இந்த துல்லியமான தருணத்தில் அறிவுசார் சொத்துக்களை திருட முயற்சிப்பது தொடர்பாக நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற நிதிய தன்னலக் குழுக்களின் ஊதுகுழல்களால் எழுந்த திடீர் பீதி, தடுப்பூசி பந்தயத்தில் சீன மருத்துவ நிறுவனங்கள் மேற்கொண்ட முன்னேற்றங்களுக்கு முன்னே வைத்து அளவிடப்பட வேண்டும். செயலற்ற வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தி Sinopharm, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான பரிசோதனை இலக்குகளை அணிதிரட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு சீன நிறுவனமான Sinovac Biotech, பிரேசிலில் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மாத தொடக்கத்தில் ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து கூட தடுப்பூசி வளர்ச்சியில் அதன் மேம்பட்ட நிலை மீது நிதிச் சந்தைகள் மூலம் தாக்குதலை எதிர்கொள்கிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த AstraZeneca, தற்போது பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவில் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. எவ்வாறாயினும், அவற்றின் முதல் கட்ட சோதனையில் உயர்ந்த நடுநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி அளவுகளும் மற்றும் T-கலங்களின் பிரதிபலிப்பும் எடுத்துக்காட்டப்பட்டபோதிலும் அதன் பிரதிபலிப்பு ஏனைய தடுப்பூசிகளைப் போல வலுவானதாக இருக்காது என்பதால் இந்த வாரத் தொடக்கத்தில் பங்குகள் ஏழு சதவிகிதம் சரிந்தன. இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பில்லியன் மருந்தளவுகளை உற்பத்தி செய்ய கடமைப்பட்டுள்ளதாக இந்த மருந்து நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது.
Comments
Post a Comment